எனது கவிதைகள்



மழை

கதிரோனும்   நீரும்   கனிவுடனே   கூடி

நீராவி   எனும்   மகவை   பெற்று

அவள்   வெண்முகில்   எனும்   பருவம்   கடந்து

கார்முகில்   எனும்   பருவம்   எய்தியவுடன்

வீசிளம்   குளிர் தென்றலுக்கும்   தன்   மகளுக்கும்

மலைமுகடு   எனும்   மணமேடைதனில்

விவாகம்   செய்ததன்   விளைவாக

மணமாலை   கொண்ட   இல்லாள்

ஒப்பில்லா   தாய்மை பேற்றினை  அடைந்து

மாரிமழை   எனும்   மகவை   பிரசவித்தாளோ  ?!

 நட்பு அழிவதில்லை

 கல்லூரியாம்
பூங்கொடியில் காண்
நட்பாம் நன்மலரே...
நீ சிறப்பாய்!


நட்பை மலர் என்றிடின்
காலமதை வாட்டிடுமே...
ஆம்!
அவ்வாட்டமே பிரிவாம்!
அத்துடன் முடிவுற்றதா?
அம்மலரின் பயணம்!

தன் வாட்டமாம் இறுதியில்
பதிவாம் விதையினை,
நெஞ்சமாம் பூமித்தாயிடம்
விதைத்து சென்றிட,
நினைவாம் நீரை
நிறைவாய் அளித்திடின்,
விதையாம் பதிவுகள்
விருட்சமாய் உருவெடுத்திட,
என்று முடியும் இப்பயணம்...

என்றும் முடிவதில்லை!
நட்பு என்றும் அழிவதில்லை!!
இதை மாற்றிட எவருமில்லை!!!

ஒரு தாயின் குமுறல்

(கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு  போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக(ண)மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

திருமணமாம்...?!

நாள் கிழமை
நேரம் நட்சத்திரம்
இன்ன பிற
சாத்திர சம்பிரதாயங்கள்
பார்த்து...

நல்ல விலை
கொடுத்து...

ஆடவன் ஒருவனை
தன்
அழகு மகளுக்கு
பெண் மகளைப்
பெற்றோர்
வாங்கிக் கொடுக்க...

சொல்கிறார்கள்...
இதற்குப் பெயர்
திருமணமாம்...?!

ஹைக்கூ

வெண்ணிலாப் பொட்டின்றி
விதவையானாள் வான்மகள்
அமாவாசை!


மரங்கள்
மொட்டையடிக்கப்பட்டன
பயிர்செய் பருவம்!



கருத்தரிக்காமலே
குழந்தை பெற்றது.
குப்பைத்தொட்டி!


எவனோ எவளோ
தவறிழைக்க
தண்டனை பெற்றது.
அனாதைக் குழந்தை!


என்ன வேண்டுதலோ?
ஒற்றைக்காலில் தவம்.
மரம்!


உரிக்க உரிக்க கண்கள்
உகுக்கிறது கண்ணீர்.
வெங்காயம்!


வானில் உயரப் பறக்கும்
உயிரில்லாப் பறவை.
விமானம்!



நிழலே...

எனை
தொடர்ந்து வரும் நிழலே...
தூரப்போ...!
நீயுமா இப்படி?!
உனை
தூயவன் என்றெண்ணியிருந்தேனே...
நீயும்
சிலரைப்போல்
சாய்கிறாயே...
நேரத்திற்கு ஏற்றபடி!

என் தாய்!

எந்தையிடம் தாவென்று
எனைக் கேட்டு பெற்றவள்;
யாரவள்?
என் தாய்!

என் தாயே!

கருவான நாள் முதலாய்
கவனித்தாய்;
எனை
கண்ணும் கருத்தாய்!

கருவிலே நான் வளர
உன்னுணவை எனக்கும்
தாமாகவே
பகிர்ந்தளித்தாய்!

ஈரைந்து திங்களாய்
இடுப்பு நோவுடன் எனை சுமந்து
மீளாத வலி தாங்கி
மீண்டு வந்து ஈன்றெடுத்தாய்!

கண் விழித்ததும் கண்டு
எனைக் கனிவுடனே கண்ணோக்கி
வாஞ்சையோடு
வாரியணைத்தாய்!

அனுதினமும் அன்போடு
எனை
உன் நெஞ்சணைத்து
அமுதளித்தாய்!

பஞ்சணையி லல்ல; உன்
நெஞ்சணையில் தூங்க வைத்தாய்!
உறவுகளை அறிவித்து எனக்கு
உலகையும் கற்பித்தாய்!

என் மழலை மொழி கேட்டு
உன் துன்பம் தொலைத்திருந்தாய்!
எழுந்து நான் நிற்கையிலே
என் மகனென்று மகிழ்ந்திருந்தாய்!

நோயோ எனை வருத்த
கண் விழித்து பசித்திருந்தாய்!
படைத்தவனை கடிந்து நீயும்
பத்திய உணவு புசித்திருந்தாய்!

என் பசியை நான் மறக்க
உன் பசியை நீ மறந்தாய்!
பாலகனாம் எனை நினைத்து
பகல் கனவு கண்டிருந்தாய்!

அதிகாலை துயிலெழுப்பி
அடுத்த நாளை அறிவித்தாய்!
சிறு வெற்றியை மிகப்பெரிதாய்
சிறப்பு செய்து நீ மகிழ்ந்தாய்!

வேலைக்கு எனை அனுப்ப
வேண்டாமென்று
நீ மறுத்தாய்.
நீ மறத்தாய்!

கை வளையல் தான் வைத்து
கல்லூரிக் கனுப்பி வைத்தாய்!
பொன்னகையை தான் மறந்து
புன்னகையை நீ அணிந்தாய்!

உன்
உதிரத்தை உயிராக்கி
எனக்கூட்டியதால்
உருக்குலைந்தாய்!

நீயோ கனிவின் ஊற்று.
உன் அன்பிற் குண்டோ மாற்று!
நீ பொறுமையின் பிறப்பிடம்.
சகிப்புத் தன்மையின் புகலிடம்!

உன் சேலைச் சோலை
காணக்கிடையா பூங்காவனம்.
சுமை தாங்கியாம் என் தாயே
நீ காணக் கிடைத்த என் தெய்வம்!

உன் உடல் காண் சுருக்கங்கள்
சுருக்கமல்ல தாயே!
நீ எனக்களித்த
ஆயுள் ரேகை!

என்ன தவம் செய்தேன்
என் தாயே!
என் தாயாய்
உனை அடைய!

இனியொரு சொர்க்கம்
தேவையில்லை;
உன் அருகாமை என்றும்
எனக்கிருக்கையிலே!

முழுமை பெற்று விட்டேன்
தாயே!
முழு மதியாய்
உன்னை பெற்றதால்!

ஏக்கம்!

அன்று
என் தாயே!
நீ
உன் தோள் மீது
என் தலை சாய்த்து
தாலாட்டுப் பாட்டுப் பாடி
எனை தூங்க வைத்தாய்.
உன் அரவணைப்பில்
நான் அயர்ந்து தூங்கினேன்!

அதன் பிறகு
அப்படியொரு தூக்கத்தை
இது வரை என் கண்கள்
ஏனோ காணவில்லை!

இன்று
பஞ்சணையில் படுத்து
புரண்டு பார்க்கிறேன்...
உன் நெஞ்சணையில்
நான் சுகித்த சுகத்தை
எப்படியம்மா...
இந்த பஞ்சணையால்
தர இயலும்?

மறு பிறப்பெடுத்து
இந்த மண்ணில்
மீண்டும் ஒரு முறை
எனக்காக
பிறந்து வா என் தாயே!

உன் மடி மீது
என் தலை சாய்த்து
நான்
மறுபடியும் ஒரு முறை
அயர்ந்து தூங்க வேண்டும்!

ஆம் தாயே!
நான்
அயர்ந்து தூங்க வேண்டும்!

குறும்பாக்கள்

திருமணம்!

கல்யாணச் சந்தையில்
பேரம் படிய...
இனிதே நடந்தேறியது.
திருமணம்?!

மழை!

விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையே
இறைவன் வேயும்
இணைப்புப் பாலமோ?!
மழை!

புகைவண்டி பயணம்!

ஏழைகளின் ரதமே!
ஏனிந்த பெருமூச்சு?!
ஏதேனும் பிரச்சினையோ?

புகைதனை கக்கியபடி வரும்
தொடர் வண்டியே!
உன் செயல்களை
உன்னில் நிகழ்வனவற்றை
என்
சிந்தனைக் கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்க விழைகிறேன்.
சிறக்கட்டும்!

நீ வருகை தரும் காட்சி
அடடா!
கொள்ளை அழகு!

அரங்கதனில்
அழகுப் பெண்ணின்
நடன அரங்கேற்றமதாய்...
நீ அசைந்தாடி வரும் காட்சி
அத்துணை அழகு!

நீ ரெயில் நிலையத்தை
நெருங்குகையில்
நடை பயிலும் காட்சி...
கம்பி மீது நகரும்
கம்பளி பூச்சியதாய்
என்
கற்பனைக்குள் விரிகிறது!

கொண்ட கொள்கைதனில்
உறுதியாய்
தடம் பிறழாமல்
நடை பயின்றால்
இலக்கு எதுவாயினும்
எளிதாய் அடையலாம் எனும்
வாழ்க்கைத் தத்துவத்தை
நீ
உணர்த்தி நிற்கிறாய்!

உன்னில்
நான் பயணிக்கையில்
கண்ட கவின்மிகு காட்சிகள்
இங்கே வரிசையாய்...

என்ன விந்தை!
நீ
முன்னோக்கி நகர்கையில்
மரங்கள்
பின்னோக்கி நகர்கின்றன!

அடடே!
இவ்வுலகில் காண் அனைத்தும்
வெறும் மாயை எனும்
உலகத் தத்துவத்தை
நீ
உணர்த்தி நிற்கிறாய்!

நீ செல்கையில் வழியில்
வறண்ட பகுதிகளும்
வனப்பு மிகு பகுதிகளும்
மலை மேடுகளும்
என்?
பள்ளங்களும் கூட வரும்!

ஓ...
வாழ்க்கை என்றால்
ஆயிரமிருக்கும் அதில்
இன்பமும் துன்பமும்
இணைந்தே இருக்குமெனெ
நீ
எடுத்தியம்புவதாய் உணர்ந்தேன்!

உன்னில் தான்
எத்தனை அறைகள்!
அதில் அனுதினமும்
எத்தனை பேர்
உண்டு உறங்கி ஓய்வெடுத்து
ளித்து கழித்துச் செல்கின்றனர்.
நீ என்ன
நகரும் தங்கும் விடுதியா?!

நீ என்ன அரசியல்வாதியா?
இல்லை...
அமைச்சரா?
நீ வருகையில் வழியில்
சாலையின் இருபக்கமும்
மக்கள்
காத்துக் கிடக்கின்றனரே,,,
நீ கடந்து செல்லும் வரை?!

உன்னில்
பயணம் செய்கையில்
நான்
என் வீட்டில் இருப்பதாய்
எண்ணி மகிழ்ந்தேன்!

வழி நெடுகிலும்
எத்தனை
ஒரு நாள் உறவுகளை
சந்தித்தேன்?
சிந்தித்தேன்.
தெரியவில்லை!

புகை வண்டியே!
உன் பணி
போற்றுதலுக்குரியது!

உன் சேவை
என்றென்றும்
எமக்குத் தேவை!

உன்னில்
மீண்டும் பயணம் செய்யும்
நாளை எதிர் நோக்கி
ஆவலாய்
நான் காத்திருக்கிறேன்!

என்னவள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
எனக்குப் பிடித்துப் போனாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் உள்ளமதைக்
கொள்ளை கொண்டாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் நினைவலைகளில்
நீங்கா இடம் பிடித்தாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் இதய வாசல் திறந்து
என்னுள் குடி புகுந்தாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
கவின்மிகு காட்சியாய்
என் சிந்தை நிறைந்தாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் தனிமைக்குத் துணையானாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் கவிதைக்கு
கரு தந்தாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் உயிரின் உறவானாள்!

அவள்
பேரழகி அல்ல!
ஆனாலும்
என் உலகமானாள்!

என் தோல்விக்குத்
தோள் தந்தவள் அவள்!
என் வெற்றிக்கு
வித்திட்டவள் அவள்!

அவளை நான்
மனதில் சுமக்கிறேன்!
அதனால்
மரணத்தை வெறுக்கிறேன்!

இதை
இப்பொழுதே
அவளிடம் உரைக்கிறேன்!

கண்ணின் மணியே!
என் உயிர்
எனைப் பிரிந்திடினும்
நான் உனைப் பிரியேன்!

மரணமே
எனை வென்றிடினும்
மறுபடியும்
உனக்காய் உயிர்த்தெழுவேன்!

என்னவளே!

நீ
எனக்கே கிடைக்க வேண்டும்!
கிடைப்பாய்!

என்றும்
சுயநலத்தோடு நான்!

அழுகையும்! சிரிப்பும்!

அழு!
அழவேண்டிய நேரத்தில்
அழு!
அழாவிட்டால்
மன அழுத்தம் அதிகமாகும்.
அழு!

அழு!
வாய் விட்டு அழு!
அழுதால்
வலி விட்டு போகும்.
அழு!

அழு!
அழுதால்
தனியாக அழு!
இல்லையேல்
நடிப்பு என்பர்.
அழு!
தனியாக அழு!

சிரி!
சிந்தனையைக் கவரும் விதம்
சிரி!
சிரிக்காவிட்டால்
சிறக்காது உள்ளம்
சிரி!

சிரி!
சரியான நேரத்தில் சிரி!
சரியாக சிரி!
சிரி!

சிரி!
சிரித்தால்
கூடுமாம் ஆயுள்!
சிரி!

சிரி!
நகைத்தல்
நமக்கே உரியது!
சிரி!
நன்றாக சிரி!

சிரி!
கூட்டத்தோடு சிரி!
தனியாய் சிரிப்பின்
சொல்வர்
பைத்தியம் என்று!
சிரி!
கூட்டத்தோடு சிரி!

சிரி!
ஆணவத்தோடு அல்ல...
அவிழும் மொட்டாய்
அழகாக சிரி!
சிரி!

நாக்கு! (குறும்பா)

சிறு வளை நடுவே
வகையாய்
களிநடனம் புரியும்
நஞ்சுடை
நச்சுப்பாம்போ நீ?!

ஒட்டு!

கந்தல் துணியென
காட்சி தரும் சாலைகளுக்கு
கடைசி நேரத்தில்
அவசர கதியில்
ஒட்டு போடப்படுகிறது.
தலைவர் வருகிறாராம்?!

உரைத்திடு...

அன்பு நிறை என்னவளே! நீ
ஆணி வேரென என்
இதயக்கமலத்தில்
ஈசன் அருளுடன்
உறைந்து
ஊன்றி விட்ட பின்
என் செய்வேன்...
ஏழையாகிய நான் - என்
ஐயம் தெளிவித்து - நாம்
ஒன்றுபட்டு வாழ - அன்பே
ஓர் வழி உரைத்திடு - நம்
ஔவை மொழியதாய்.

ஔவைக் கிழவி!

அன்பிற்குரியக் கிழவி- நம் தமிழை
ஆட்சி செய்தக் கிழவி - நண்பனுக்கு
இறவா வரம் தரும் நெல்லிக் கனியை
ஈந்தக் கிழவி - நல் அறவுரைகளை நம்
உள்ளத்துள் தங்கச் செய்து
ஊக்கம் தந்தக் கிழவி - சிறப்புடை
எண்ணிலா வான் புகழ் பாடல்களை
ஏட்டிலே தந்தக் கிழவி - நம் மனமுடை
ஐய மகற்றி மாண்புறச் செய்தக் கிழவி
ஒப்பிலாக் கருத்துக்களை மாந்தருக்காய்
ஓதியக் கிழவி - யாரவர்? அவர் தான் நம்
ஔவைக் கிழவி!

அழைப்பு!

அன்று மட்டும்... என அங்கலாய்க்கும் என்
ஆருயிர் நண்பனே!
இழப்பதற்கு எதுவுமில்லை
ஈரைந்து விரல்களுடை இரு கைகள் இருக்கையிலே...
உணர்வற்றக் கூடாய் இன்னும் உறக்கம் எதற்கு?
ஊரே மெச்சும் படி
எல்லா வளங்களும் பெற்று
ஏற்றமுடன் வாழ்ந்திட...
ஐயமின்றி உள்ளுறைக் கவலைகளை
ஒதுக்கிவிட்டு உத்வேகத்துடன்
ஓடோடி வா...
ஔவை மொழிதனைக் கைக்கொண்டு!

நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)

அநீதி அழித்திடு.
ஆணவம் தவிர்.
இல்லார்க்கு ஈ.
ஈசனைப் பணி.
உண்மை உரை.
ஊரோடு சேர்.
எளிமை சிறப்பு.
ஏக்கம் விலக்கு.
ஐயம் அகற்று.
ஒழுக்கம் கடைபிடி.
ஓசையின்றி உதவிடு.
ஔவை வழி நட.

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

தகர வருக்கம்

தன்னலம் தவிர்.
தாமதம் இழுக்கு.
திறமை பெருக்கு.
தீயவைக் களை.
துணிவு கொள்.
தூய்மை நலம்.
தெளிந்து செய்.
தேடல் சிறப்பு.
தைரியம் போற்று.
தொழில் அறிந்திடு.
தோழமைத் தேர்ந்தெடு.
தவறத் தயங்கிடு.

அன்பு நண்பரே! வாழ்த்துக்கள்! 

(அய்யா வைகுண்டரின் அன்புபதி சென்று வந்த அன்பு நண்பருக்காக...)


அய்யா வைகுண்டரின் அன்புபதி சென்று
ஆனந்தம் கண்டதை அன்பு நண்பரே உங்கள்
இயல்பான வரிகளில் கண்டேன்- நாடி வந்தோர்க்கு
ஈந்திடுவார் இன்ப வாழ்வுதனை மட்டன்றி
உலகம் உய்யும் அவரின் கருத்துக்களால்
ஊரே அவர் புகழ் பாடிட...
என்றும் நலம் தருவார்
ஏற்றமுடை வாழ்வும் தந்து
ஐயம் துளியும் வேண்டாம் பார் போற்றும்
ஒருவராய் பண்பாளராய்
ஓங்கி வளரச் செய்வார் உம்மை
ஔவையினும் மேலாய்.

வாழ்த்துக்கள்!

குப்பைத்தொட்டியாகிய நான்!

என் பெயர்
குப்பைத்தொட்டி.

தன்னந்தனியாய்
தெருவோரங்களில்
தென்படுவேன் நான்!

என் சொந்தக் கதையை
நான் நொந்தக் கதையை
உங்களிடம் பகிர்கிறேன்
கேட்பீர்!

நீங்கள் வேண்டாமென்று
ஒதுக்கியதை ஒதுக்காமல்
ஏற்பவன் நான்!

என்னில்
காய்ந்த சருகுகள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
உதிர்ந்த மலர்கள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
ஆனால்
மலரத் துடிக்கும்
மொட்டுக்கள் விழுவதை
எங்ஙனம் ஏற்பேன்!

கல்யாணம் இல்லை.
கருத்தொருமிக்க வில்லை.
கருத்த‌ரிக்கவில்லை.
கடுத்த வேலை செய்யவில்லை.
இடுப்பு நோவுமில்லை.
ஈரைந்து மாதம் இறக்காமல்
சுமக்கவுமில்லை.
ஆனாலும்
குழந்தை பெற்றேன்!
அதனால்
அவப்பெயரும் பெற்றேன்!

ஆம்!
உங்களில் ஒரு சிலர்
அறிவிழந்து தவறிழைக்க‌
பாவத்தின் பரிசை
நான் சுமக்க‌
அவப்பெயருடன்
அழியா வடு பெற்றேன்!

நான் கேட்கிறேன்...
எவ‌னோ எவ‌ளோ
செய்த‌ இழிசெய‌லுக்கு
ஏன‌டா சூட்டினீர்
ப‌ட்ட‌த்தை
அனாதையென்று
பிற‌ந்த‌ குழ‌ந்தைக்கு?!
என்ன‌ த‌வ‌ற‌டா செய்த‌து
அந்த‌ பிஞ்சுக்குழ‌ந்தை?!

என்னை

ஈக்க‌ள் மொய்த்திடும்.
எறும்புக‌ள் பூச்சிகள்
ஏன்?
புழுக்கள் கூட தேடி வ‌ரும்.
ஆனால்
ஏன‌டா
குழ‌ந்தைக‌ள்
தேடி வ‌ந்த‌து?!
குழ‌ந்தைகள் தேடி வ‌ர
நான் என்ன‌

குழ‌ந்தைகள் காப்ப‌க‌மா?!

பெண் குழ‌ந்தையை
பாவ‌மாய்
பெரும் பார‌மாய் எண்ணி
என்னில் இடுவோரே!
நான் கேட்கிறேன்...
விதையிட‌ உக‌ந்தாயே
விளைச்ச‌லுக்கு ஏன‌டா ம‌றுத்தாய்?!

உறவில்லா என‌க்கு
உற‌வாய் வ‌ந்த‌து
ஒரு நாய்க்குட்டி...
அது என்னையே எப்பொழுதும்
சூரியனை சுற்றும் பூமியாய்
சுற்றி வ‌ரும்.

ஆண்டவா!
என்ன‌க் கொடுமை!
ஒரு நாள்
அதற்கும் வ‌ந்த‌து போட்டி.
தாய்ப்பால் போதை
த‌ணிந்த‌தோ என்ன‌வோ
ம‌துவை
அள‌வுக்க‌திக‌மாய் அருந்திவிட்டு
அன்னை ம‌டியென‌
என்னில் த‌லை சாய்த்து
வீழ்ந்து கிட‌ந்தான்
வீண‌ன் ஒருவன்.

ம்ம்ம்...
இப்ப‌டியும் சில‌
சிந்தையில்லா
விந்தை ம‌னித‌ர்கள்?!

என‌க்கு இங்கே
பிடித்தோர் இருவர்.

ஒருவ‌ர்
என்னை சுத்தம் செய்யும்
துப்புர‌வுத் தொழிலாளி.

என்னை பொருத்த‌வ‌ரையில்
அவ‌ரும் ம‌ருத்துவரே!
ஆம்!
வ‌ரப்போகும் நோயை
வ‌ராம‌ல் செய்வ‌தால்!

ம‌ற்ற‌வர்
என்னில் காண்
அழுக்குக் காகித‌ங்க‌ளை
அழ‌காய் பொறுக்கி
ப‌டித்து வ‌ரும்
ஏழாம் வ‌குப்புச் சிறுவ‌ன்.

என்னைக் கேட்டால்
இவ‌ரை
சிற‌ப்பான‌வ‌ர் என்பேன்!

ஏனெனில்
கேள்விக்குறியாய் வ‌ளைந்திருந்த
த‌ன் வாழ்க்கையை
ஆச்ச‌ரிய‌க்குறியாய் தானே நிமிர்த்த
தின‌ம் துடிப்ப‌வ‌ன்!

இவ‌னைப்போல்
நீவிர் அனைவ‌ரும்
ஆச்ச‌ரிய‌க்குறியாய் மாறிடுங்கள்!

நும்
இரு விழி மூடி
சிந்த‌னை செய்து
இத‌ய‌ வாச‌ல் திற‌ந்திடுங்கள்!

ம‌னித‌ம் போற்றுங்கள்...
மானுட‌ம் வ‌ள‌ருங்கள்!
த‌வ‌ற‌த் த‌ய‌ங்குங்கள்...
த‌ழைத்தோங்குங்க‌ள்!

நீவிர்
ந‌ல் எண்ண‌ங்க‌ளைக் கூட்டி
குறைக‌ளைக் க‌ழித்து
ந‌ல்ல‌ன‌ அல்ல‌ன‌ வ‌குத்து
நிறைக‌ளை பெருக்குங்கள்...
என்றுரைத்து...
என்னுரை கேட்ட‌மைக்கு
ந‌ன்றியுரைத்து...
வ‌ண‌க்க‌ம் கூறி
விடை பெறுகிறேன்.
வாழ்க! வ‌ள‌ர்க‌!!

அன்பே...

அன்பே! என்
ஆருயிரே!
இனி நாம்
ஈருயிராய்
உடலளவில் இருப்பினும்...
ஊன் உறக்கமின்றி
என்றென்றும் உனை நினைத்து
ஏங்கித் தவிக்கும் எனக்கு
ஐயம் சிறிதுமில்லை - நாம்
ஒருவரே - மனதளவில்
ஓருயிரே - இதற்கு நம்
ஔவை ஆண்ட அருந்தமிழே சாட்சி!

என்று மாறும் இந்த நிலை?!

கற்றதால் பெற்றதை
காண்பித்தும்
கிஞ்சித்தும் இரக்கமின்றி
கீழ்த்தரமாய்
குவலயத்தையே
கூவமாக்கும்
கெட்ட எண்ணத்தோடு
கேட்டான்
கைக்கூலி
கொடு என்று
கோட்டானை யொத்த அவன்.
கவலையோடு கற்றறிந்த ஏழை?!

முரண்பாடு

புகை பிடிக்காதீர் என்றும்
புகை நமக்கு பகை என்றும்
அறிவிப்புப் பலகையில்
எழுதிக் கொண்டிருந்தான் அவன்
புகை பிடித்துக் கொண்டே?!

வான் நிலா... நீ வா உலா!

வான் நிலா
இன்று வானிலை
காரணம் வானிலை.

வான் நிலா
நீயிலா
வான் வானிலை
வா நிலை.

வானிலா
வான் நிலா
கொஞ்சம் வா நிலா
வசந்தம் தா நிலா.

தண்ணிலா
நீ அகல் நிலா
காரிருள் அகல் நிலா
அகற்றி
அகலாய் நிலா.

வெண்ணிலா
நீ வா நிலா
வந்து வானிலே
காய் நிலா
காய்த்து எம் பூமியைக்
காய் நிலா.

பொன்னிலா
நீ பூ நிலா
வந்து வானிலே
நீ பூ நிலா.

வெள்ளி நிலா
உனை சுற்றிதான்
எத்தனை வெள்ளி நிலா.

தங்க நிலா
எமக்கு இடம் தா...
தங்க நிலா.

சன்னலில்
முகம் சாய்த்து
சங்கடத்தில் என்னவள்.

வா நிலா
வஞ்சியவள்
வட்ட முகம் காண் நிலா
கண்டு நீ நாண் நிலா
முகிலிடை
உன் ஒளி மறைத்து
ஒளி நிலா
மகிழ்வாள் என் நிலா.

அடுத்த வீட்டு முற்றத்தில்
அன்னையொருத்தி
ஆவலோடு காத்திருக்கிறாள்
நிலாச் சோறூட்ட...
வா நிலா
உன் வருகை
தா நிலா.

அமாம்!
அழகே வெண்ணிலா
களங்கம் உன்னிலா;
இல்லை...
காண்பவர் கண்ணிலா.

எண்ணிலா
விண்மீன் காண்
விண்ணிலே வளர் நிலா
வா நிலா
வந்து நின்
வெளிச்சம் பாய் நிலா.

உன்பால்
கொண்ட அன்பால்
வரைகிறேன் இப்பா நிலா
வா நிலா
நீ
வான் வீதியில்
வா உலா.

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

வளைந்து
நெளிந்து செல்கிறது
அழகான ஒற்றையடிப் பாதை.
என்னவளின் உச்சி வகிடு!

காந்தங்களுக்கு
இரு துருவங்கள் உண்டாம்;
இரு புருவங்கள் கண்டேன்.
என்னவளின் கண்கள்!

தரையைத் தொட்டு விடும்
தூரத்தில் விழுதுகள்.
என்னவளின்
எழில்மிகு கூந்தல்!

அருள் மழை பொழிந்திடுவாய்!

(எனை இப்புவி தந்து கவி தந்த கலியுக தெய்வம் அய்யா வைகுண்டரை வேண்டுவதாக அமைத்த பாடல்...)


நான் எடுத்த பிறவிதனை
நன்றாக்கித் தந்தவரே...
நாள்தோறும் நவின்றிடுவேன்
நாவினிக்க நும் புகழை...

அன்பு வழி தந்தவரே
அகிலத்தை ஆள்பவரே
அடிபணிந்து வணங்கி நின்றேன்
அடியேனைக் காத்திடுவாய்.

நற்கல்வி தந்து எனை
நல்வாழ்வு வாழ வைத்தாய்.
உலகுக்கு உனை உரைக்க
உன் மகன் எனை பணித்தாய்.

பூமாலை சூட்டி நின்றேன்
பாமாலை பாட வைத்தாய்.
பாமாலை இயற்ற வைத்து
அப்பாவாலே ஏற்றி வைத்தாய்.

என்றும்
உன் நாமம் உரைத்து நின்றேன்...
உலகறிய வைத்திடுவாய்.
உத்தமனாய் வாழ வைத்து எனை
ஊர் போற்றச் செய்திடுவாய்.

முக்காலம் உணர்ந்தவரே
மூவுலகும் காப்பவரே
அறியாமை இருளகற்றி என்னில்
அறிவொளி ஏற்றிடுவாய்.

எனை புவி தந்து கவி தந்தாய்
பரம்பொருளே வணங்குகிறேன்...
நின் திருவடி சரணடைந்தேன்
அருள் மழை பொழிந்திடுவாய்!

என் ஊஞ்சல்! (இளஞ்சிறார்களுக்காக...)

எங்கள் வீட்டுக் கொல்லையிலே
வேப்ப மரமொன்று நிற்கிறது.

அதன் உச்சாணிக் கிளைதனிலே
என் அழகு ஊஞ்சல் ஆடுகிறது.

அதை ஆசையோடு நானும் கேட்க
என் அப்பா கட்டித் தந்தாரே.

அதில் ஆவலுடனே நானும் அமர
என் அண்ணன் ஆட்டி விடுவாரே.

எனக்குப் பிடித்த ஊஞ்சலே
உன்னிடம் கேட்கிறேன் ஒரு கேள்வி?

ஊசல் போன்றே நீ ஆட
ஊஞ்சல் எனப் பட்டாயோ!

அனுதினமும் மாலை நேரம்
நானும் உன்னில் ஆடி மகிழ்வேனே!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,





Make a Free Website with Yola.